

கரோனா ஊரடங்கு காரணமாக, கோயம்பேடு சந்தையில் மூடப்பட்ட தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக்கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், 150 முதல் 600 சதுர அடி வரை மட்டுமே இடம் உள்ள தங்களைப் போன்ற சிறிய கடைக்காரர்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி காலியாக கிடந்த மைதானத்தை பயன்படுத்தி தக்காளி கூடைகளை இறக்கி, ஏற்றி வந்ததாகவும், ஆனால் சிஎம்டிஏ அதிகாரிகள் திடீரென அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. நீதிபதி, “வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற சிஎம்டிஏ விதி சரியானதுதான். ஆனால் தக்காளி விலை ஏற்றத்தைக் கருத்தில் கொண்டு நான்கைந்து சிறு வியாபாரிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு தக்காளி லாரியை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரும் பட்சத்தில் அந்த வாகனத்தை மைதானத்தில் நிறுத்தி சரக்கை இறக்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து சிஎம்டிஏ நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.29-க்கு தள்ளி வைத்துள்ளார்.