

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. தொடர் மழை யால் விவசாயிகள் வருகை குறைவாகவே இருந்தது.
வேளாண் அதிகாரி பேசும்போது, “தென்காசி மாவட்டத்தில் தரிசு நிலங் களை விளைநிலமாக்கும் திட்டம் 7 வட்டாரங்களில் செயல்படுத்தப் படுகிறது. விவசாய நிலங்கள் மற்றும் குளக்கரைகளில் நடுவதற்கு பனை விதைகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்றார்.
உரத் தட்டுப்பாடு
தென்காசி மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு நீடிக்கிறது. உரக்கடைகளில் விலை விவரங்கள் குறிப்பிடாமல், கூடுதல் விலைக்கு விற்பனை செய் கின்றனர். காம்ப்ளக்ஸ் உரங்களை கேரளாவில் இருந்து இறக்குமதி செய்து, கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்ய வேண்டும்.
இலத்தூர் பெரியகுளம் மூலம் 450 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மடையில் இருந்து கிழக்கு நோக்கி வரும் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், கடைமடைக்கு தண்ணீர் வர முடியவில்லை. மனு கொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. புளியரையில் மழைமானி அமைக்க வேண்டும். தென்னை மரம் ஏறுவதற்கான கருவியை மானியத்தில் வழங்க வேண்டும். மேக்கரையில் தொடர் மழையால் சேதமடைந்துள்ள மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
தென்காசி பிறக்கால் குளத்தின் கரை மாட்டுவண்டி செல்லும் அளவுக்கு அகலமாக இருந்தது. தற்போது நடந்து கூட செல்ல முடியவில்லை. கரையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, அகலப்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
670 டன் உரம் வரத்து
மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, வேளாண்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
404 குளங்கள் முழுமையாக நிரம்பின
தென்காசி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 814 மி.மீ. ஆகும். நவம்பர் மாதம் வரை 703 மி.மீ. மழை பெய்ய வேண்டும். இந்த ஆண்டில் 1,688 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 53 சதவீதம் கூடுதலாகும். தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 466 குளங்களில் 404 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 20 குளங்களில் 76 சதவீதத்துக்கு மேலும், 13 குளங்களில் 51 முதல் 75 சதவீதம் வரையும், 25 குளங்களில் 26 முதல் 50 சதவீதம் வரையும், 4 குளங்களில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீர் இருப்பு உள்ளது.