Published : 26 Nov 2021 03:08 am

Updated : 26 Nov 2021 03:08 am

 

Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

புதுச்சேரியில் 13 - 15 வயது மாணவர்களில் - 4.3 சதவீதத்தினரிடம் புகையிலை பழக்கம் : கணக்கெடுப்பு முடிவு வெளியீட்டில் தகவல்

புதுச்சேரி

உலக இளைஞர் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பானது (ஜிஒய்டிஎஸ்) 2019-ம் ஆண்டு தேசிய ஆய்வின் ஒரு பகுதியாக இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாபுலேஷன் சயின்சஸ் மூலம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையால் புதுச்சேரியில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் மொத்தமாக 2,437 மாணவ, மாணவிகள் 22 பள்ளிகளில் இருந்து (அரசு-8, தனியார் - 14) பங்கு பெற்றனர். அதில், 13-15 வயதுக்குட்பட்ட 2,179 மாணவ, மாணவிகள் பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், புதுச்சேரி அரசு மார்பு நோய் நிலையம், மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக நலத்துறை, சண்டிகர் பிஜிமர் சார்பில் உலக இளைஞர் புகையிலை பயன்பாடு கணக்கெடுப்பு- 4 , புதுச்சேரியின் தகவல் இதழ் வெளியீடு மற்றும் புகையிலை நிறுவனங்களின் குறுக்கீடு தொடர்பான பயிலரங்கம் புதுச்சேரியில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரியின் உலக இளைஞர் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பு தகவல் இதழை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன், சண்டிகர் பிஜிமர் மருத்துவமனையின் பொது காதாரத்துறை தலைவர் சோனு கோயல், ஜிப்மர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை தலைவர் சித்தான்சு சேகர் கர், மாநில ஆலோசகர் சூரியகுமார், பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கணக்கெடுப்பின்படி புதுச் சேரியில் 13- 15 வயதுக்குட்பட்ட மாணவர்களிடத்தில் 4.3 சதவீதம் புகைக்கும் அல்லது மெல்லும் வகை புகையிலையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 8.5 சதவீதத்தை ஒப்பிடும் போது பாதியளவு குறைவாகும்.

மேலும் 2.8 சதவீதம் சிறுவர், சிறுமிகள் புகைக்கும் வகை புகையிலையையும், 1.4 சதவீதம் சிறுவர், சிறுமிகள் மெல்லும் வகை புகையிலையும் பயன்படுத்துகின்றனர். புகைப்பவரின் அருகில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வீட்டினில் 4 சதவீதமாகவும், மூடப்பட்ட பொது இடங்களில் 42 சதவீதமாகவும், திறந்த பொதுவெளியில் 37.8 சதவீதமாகவும், பள்ளி அருகாமையிலும் 17.9 சதவீதம் ஆகவும் உள்ளது.

உலக இளைஞர் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பின் மற்றும் ஒரு சிறப்பானது 68.2 சதவீதம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் `கோட்பா’ சட்டம் பற்றி அறிந்துள்ளனர். புகையிலை இல்லா பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 63.6 சதவீதம் பள்ளிகள் பின்பற்றுகின்றன. 45.5 சதவீதம் பள்ளிகள் `புகையிலை இல்லா பள்ளிக்கூடம்’ என்ற தகவல் பலகை வைக்க வேண்டும் எனும் நெறிமுறை பற்றி அறிந்துள்ளன. 77.1 சதவீதம் மாணவர்கள் புகைப்பவர் அருகில் இருப்பதால் அதனால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்துள்ளனர். 52.6 சதவீதம் மூடப்பட்ட பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும், 59.1 சதவீதம் திறந்த வெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

அரண்மனை 3 :

இன்றைய செய்தி

More From this Author

x