

மதுரை மாநகராட்சியில் சமீபத்தில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் 300 வாகனங்கள் ஒரே நேரத்தில் பழுதடைந்துள்ளதால் குப்பைகளை அகற்றுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் தினமும் 800 டன்கள் குப்பை சேகரமாகிறது. குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அள்ள ஆரம்பத்தில் தள்ளு வண்டிகள், டிரை சைக்கிள்களை பயன்படுத்தினர். 2018-ல் 509 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களை பராமரிக்க தனியாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஒன்றன் பின் ஒன்றாக பழுதடைந்து தற்போது 300 வாகனங்கள் வரை பழுதடைந்து கிடக்கின்றன.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பில் கவனம் செலுத்தாததால் பேட்டரி வாகனங்கள் பழுதடைந்துள்ளன.
ஒரு வாகனம் 20 ஆயிரம் கி.மீ. வரை நல்ல நிலையில் ஓடும். ஆனால், பராமரிப்பு இன்றி மீண்டும் இயக்க முடியாத அளவு விரைவாக பழுதடைந்துள்ளன. பேட்டரியை மாற்றினால், அதனுடன் சேர்ந்து மற்ற பாகங்களையும் மாற்ற வேண்டியுள்ளது. அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது. தற்போது 850 டன் குப்பை வரை அள்ளப்படுகிறது.
இருக்கிற வாகனங்கள், ஊழியர்களை வைத்து முக்கியச் சாலைகளில் குப்பைகள் தேங்காமல் அள்ளப்படுகிறது. பேட்டரி வாகனங்கள் பழுதால் குடியிருப்புகளில் குப்பை அள்ளுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.