Published : 25 Nov 2021 03:12 am

Updated : 25 Nov 2021 03:12 am

 

Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

கோவை மாநகரில் குற்ற வழக்குகளின் நிலை குறித்து - அறிக்கை சமர்ப்பிக்க : காவல் ஆணையர் உத்தரவு :

கோவை

கோவையில் கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, 15 விசாரணைப் பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. குற்றச் சம்பவங்கள் தொடர்பாக, தினமும் ஏராளமான புகார்கள் பெறப்படுகின்றன. சமீப காலமாக, இரவு நேரங்களில் வீட்டுப் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிவது தாமதமாகிறது. குறிப்பாக, சரவணம்பட்டியில் இரும்பு வியாபாரியின் வீட்டில் 106 பவுன் திருடப்பட்ட வழக்கு, பீளமேட்டில் ஒருவரது வீட்டில் 63 பவுன் திருடப்பட்ட வழக்கு, ராமநாதபுரத்தில் 20 பவுன் திருடப்பட்ட வழக்கு போன்றவற்றில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே, மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த தீபக் எம்.தாமோர் பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், பிரதீப்குமார் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். நிலுவை குற்ற வழக்குகளின் விவரங்கள் இவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக, துணை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காவல் ஆணையர், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறும்போது, ‘‘மாநகரிலுள்ள காவல் நிலையங்களில், கடந்த மூன்றாண்டுகளில் நடந்த குற்றச் சம்பவங்கள், அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரங்கள், குற்றவாளிகள் கைது செய்யப்படாத வழக்குகளின் விவரங்கள், நீதிமன்ற விசாரணைக்கு சென்ற வழக்குகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். நிலுவை வழக்குகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துச்செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x