சேலம் கருங்கல்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் - உயிரிழந்த அலுவலரின் குடும்பத்தினருக்கு தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குநர் ஆறுதல் :

தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் பத்மநாதனின் மகன் லோகேஷ் மற்றும் மகள் ஜீவிதாவுக்கு ஆறுதல் கூறிய தமிழ்நாடு தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநர் விஜய் சேகர்.   படம்: எஸ்.குருபிரசாத்
தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் பத்மநாதனின் மகன் லோகேஷ் மற்றும் மகள் ஜீவிதாவுக்கு ஆறுதல் கூறிய தமிழ்நாடு தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநர் விஜய் சேகர். படம்: எஸ்.குருபிரசாத்
Updated on
1 min read

சேலம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த தீயணைப்புத்துறை அலுவலரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநர் விஜய் சேகர் ஆறுதல் கூறினார்.

சேலம் கருங்கல்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில், இடிபாடுகளில் சிக்கி செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் பத்மநாதன், அவரது மனைவி தேவி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

இதில், உயிரிழந்த பத்மநாதன் உடல் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமையில், நிலைய அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, நேற்று சேலம் வந்த தமிழ்நாடு தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குநர் விஜய்சேகர், பத்மநாதனின் மகன் லோகேஷ், மகள் ஜீவிதா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பத்மநாதனின் படத்துக்கும் அவர் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். மேலும், விபத்து நடந்த வீட்டை அவர் ஆய்வு செய்தார்.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தில், தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் வடிவேல் நேற்று ஆய்வு மேற்கொண்டார். விபத்து நடந்த இடத்தில், இடிபாடுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் அங்கு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in