

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லூரியில் மாணவ-மாணவியருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:
கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்து வரும் ரூட் தல போன்ற விரும்பத்தகாத செயல்களினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பெரிதும் குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் இது தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதை உடனே அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை. ஒரு நல்ல மாணவன் அவனுடைய திறமைகளை கல்வியில் செலுத்த வேண்டும். அதன்மூலம் அவன் சிறந்த நிலையை அடைய முடியும். இவ்வாறு ராஜேஷ் கண்ணன் பேசினார்.