நடிகர் சூர்யாவை ஆதரித்து - பாம்பு, எலிகளுடன் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் :

ஜெய் பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் பாம்பு, எலிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த பழங்குடியின மக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஜெய் பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் பாம்பு, எலிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த பழங்குடியின மக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பழங்குடியின மக்கள் பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ’ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாட்டுடன் வந்து சூர்யாவுக்கும், அவர் நடித்த ’ஜெய் பீம்’ படத்துக்கும் ஆதரவாக கோஷமிட்டனர்.

இத்தகவல் அறிந்த மதுரை மாவட்ட வனத் துறையினர் வந்து பழங்குடி மக்களிடம் பாம்புகள், எலிகளை ஒப்படைக்குமாறும், அவற்றை தாங்கள் பாதுகாப்பாக காட்டில் கொண்டுபோய் விடுகிறோம் என்றனர்.

அதற்கு, பாம்புகள், எலிகளுக்கு உங்களைவிட நாங்கள் பாதுகாப்பானவர்கள், நாங்களே பாதுகாப்பாக கொண்டுபோய் விடுகிறோம் எனக் கூறி கொடுக்க மறுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு மக்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.மகேஷ்வரி கூறியதாவது:

தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கிற அநீதிகள் பற்றியே ‘ஜெய் பீம்’ படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். அதற்கு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம்.

இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின மக்களுக்கு நலத் திட்டங்களை உடனே செய்து தரும்படி ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. இதற்கு நாங்கள் தமிழக அரசுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். எந்தச் சூழ்நிலையிலும் சூர்யாவுக்கு ஆதரவாக இருப்போம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in