Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

விவசாய நிலங்களில் பசுமை சூழலை உருவாக்க - புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் : விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையை உருவாக்கு வதற்கும் தமிழக விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர் வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் 52,950 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்பு களிலும் மற்றும் குறைந்த செறி வில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், தேக்கு, செம்மரம், வேங்கை மற்றும் செஞ்சந்தனம் உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தமிழ் நாடு அரசு வனத்துறையின் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன. மரக்கன்று ஒன்றின் விற்பனை விலை ரூ.15 ஆகும். விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெறுவதற்காக அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி மூலமாகவோ பதிவு செய்து, வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

மரக்கன்றுகள் விநியோகம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மரக்கன்றுகளை பராமரிக்க விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயி களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் பாதிப்படையாமல், கூடுதலாக ஊடுபயிராக மரங்களை வளர்த்து பலனடைவது தொடர்பாக அனைத்து விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு, மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடவுப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை அரசு இணையதள செயலி வாயிலாக கண்காணிக்கப்படும். இத்திட்டத்தால் வருங்காலங் களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத்தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களில் மண் வளமும் அதிகரிப்பதுடன் மாநிலத்தின் பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x