

தென் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புபிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தெற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அங்கு சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தசோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.3,96,500 ரொக்கத்தைபறிமுதல் செய்தனர். மேலும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு மாவட்ட பதிவாளர் மீனாகுமாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது. பறி முதல்செய்யப்பட்ட பணம், விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.