Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
மூளை ரத்தக்குழாயில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு, மண்டை ஓட்டை திறக்காமல் அதிநவீன சிகிச்சை அளித்து மூவரின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.
கோவையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (48), உடுமலையைச் சேர்ந்த பொன்னுசாமி (63) ஆகியோர், மூளை ரத்தக்குழாயில் உருவான பலுான் போன்ற வீக்கத்தால் வெடிப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மூளையின் முக்கியமான தமனி மற்றும் சிரையில் ரத்தம் கலந்து, இடது கண்ணில் வீக்கம், தாங்க முடியாத வலியுடன், கோவையைச் சேர்ந்த மாரியம்மாள் (38) என்பவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
மூளை நரம்பியல் துறை மருத்துவர்கள், நவீன பரிசோதனைகளின் மூலம் நோயின் தன்மையை கண்டறிந்தனர். நரம்பியல் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் ஆர்.வெங்கடேஷ் தலைமையில், மருத்துவர்கள் குழு, மயக்க மருத்துவ நிபுணர்கள் உதவியுடன், நோயாளிகளின் தொடைப் பகுதியில் ஊசி மூலம் நுண்ணிய குழாய்களை ரத்தக் குழாய் வழியாக மூளைக்கு செலுத்தி, ‘காய்லிங்’ முறை மூலம் சிகிச்சை அளித்து சரி செய்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவ மனையின் டீன் நிர்மலா கூறும்போது, “மண்டை ஓட்டை திறக்காமல் நவீன முறையில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற மூன்று நோயாளிகளும், எவ்வித பின் விளைவுகளும் இல்லாமல் நலமாக உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இச்சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப் பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT