Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

சிறை கைதிகள் மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

கைதிகள் மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் தட்டப்பாறை காவல் சரகத்தில் கந்து வட்டி கொடுமையால் பிரம்மராஜன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் மனநல பாதிப்புக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றக்கோரி அவர் மனைவி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப் பித்த உத்தரவு:

மனுதாரரின் கணவர் 2019 முதல் மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தினமும் 9 மாத்திரைகள் சாப்பிடுகிறார். ஆனால் அவரது மனநல பாதிப்பு போலீஸாருக்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரிய வில்லை. சாதாரண நபர் போல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் நபர் இயந்திரத்தனமாக அளிக்கும் பதிலின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்க தகுதியானவர் என சான்றளிப்பதை ஏற்க முடி யாது. இதனால் கைதிகளின் மருத்துவ பரிசோதனை நெறி முறைகளை (புரோட்டகால்) அரசு மாற்றியமைக்க வேண்டும்.

கைதிகளின் மருத்துவ குறிப்பேட்டில் மனநல பாதிப்பு குறித்து குறிப்பிட தனிப்பகுதி அளிக்க வேண்டும். அந்த நபரை மருத்துவர் பரிசோதிக்கும்போது, அவரது மனநிலை குறித்து உறவினர்களிடம் தகவல் கேட்டு நிரப்ப வேண்டும்.

கைது செய்யப்படும் நபரை சிறையில் அடைக்கும் முன்பு பரிசோதித்து, அவர் மனநலம் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பல்வேறு மனநல பாதிப்புகள் உள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து போலீஸ் அகாடமி, நீதித்துறை அகாடமி மூலம் காவல் துறையினர் மற்றும் நீதித் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மனுதாரரின் கணவரை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x