

சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 6 மது பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் பார்களை நடத்தி வந்த 4 பேரை போலீஸார் கைது செய் தனர்.
கரோனா பரவலை அடுத்து தமிழகம் முழுவதும் மது பார்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நவ.1-ம் தேதி முதல் மதுக்கடைகளுடன் கூடிய பார்களை நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் அரசு உரிமம் பெறாமல் அனுமதியின்றி மது பார்களை நடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் பொது மேலாளர் வேலுமணி தலைமையில் உதவி மேலாளரும் தனி வட்டாட்சியருமான பாலாஜி உள்ளிட்டோரை கொண்ட சிறப்பு கண்காணிப்புக்குழு சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகளில் சோதனை நடத்தியது. இதில் சிவகங்கையில் 4 பார்கள், காளையார்கோவிலில் 2 பார்கள் என 6 பார்கள் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. 6 பார்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேலும் பார்களை நடத்திய கார்த்திக், மனோஜ், கருப்புராஜா, சாந்தக்குமார் ஆகிய 4 பேரை மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.