

சென்னை குன்றத்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைச்சேரி பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார். நண்பரை பார்த்து பேசிவிட்டு ஆவடியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.
அப்போது சாலையில் டிப் டாப் உடை அணிந்த நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அஜித்குமார் அந்த நபரை ஏற்றிக்கொண்டு சில கிலோமீட்டர் வந்துள்ளார். அப்போது சாலையில் இரண்டு இளைஞர்கள் வழிமறித்துள்ளனர்.
பின்னர் லிப்ட் கேட்டு வந்த நபர் உட்பட மூவரும் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இளைஞர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டனர்.
மேலும், அவரது செல்போனை பறித்த கும்பல், பணப்பரிவர்த்தனை செயலி மூலம் தங்களது அக்கவுண்டுக்கு பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். அவரும் பயத்தில் பாஸ்வேர்டை கூற, அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்கு மாற்றிக்கொண்டனர்.
பின்னர் அஜித்குமாரை, மூவரும் சேர்ந்து தாக்கி அங்கிருந்த முட்புதரில் தள்ளிவிட்டு அவரிடம் இருந்த மொபைல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி காவல் நிலையத்தில் அஜித்குமார் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் உடனே விசாரணை நடத்தினர். செயலி மூலம் பணம் அனுப்பிய எண், வங்கி கணக்கு எண் மற்றும் முகவரி ஆகியவற்றைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆவடி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ஆட்டோ ஓட்டுநர் ஹரிதாஸ், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனசேகர் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.