

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் குப்பை, கழிவுகள் அதிகமாக உள்ளதால், அவற்றை அகற்றி, தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் குப்பை மற்றும் சகதியை பாப்காட் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
இப்பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு, வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கினார்.
பின்னர், திரு.வி.க. நகர் நாச்சியாரம்மன் தெரு, ராயபுரம் ராம்தாஸ் நகரில் நடைபெற்ற மருத்துவ முகாம்களைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, ராயபுரம் போஜராஜன் நகர் ரயில்வே குறுக்கு கால்வாயை, மழைநீர் வடிகாலுடன் இணைப்பது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார்.