

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக உதகை-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை பழுதடைந்ததால் தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலாத்தலம் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது.
இந்த சாலை சீரமைக்கப் படாததால் சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். பிற சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சென்று மூடப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், உதகை தொட்டபெட்டா சாலையை ரூ.15 லட்சம்மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிநேற்று தொடங்கியது. வனத்துறைஅமைச்சர் கா.ராமச்சந்திரன் பணிகளை தொடங்கிவைத்து கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ளதால், சாலை சீரமைக்கும்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்துக்குள் இப்பணி களை முடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்” என்றார்.
மாவட்ட ஆட்சியர்(பொ) கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர்மாயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா ஆகியோர் உடனிருந்தனர்.