ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த : வட்டாட்சியரை தாக்கிய 2 பேருக்கு வலை :

ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த : வட்டாட்சியரை தாக்கிய 2 பேருக்கு வலை :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பலில் இருந்து காரைக்குடி அருகே பள்ளத்தூருக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, பறக்கும்படை தனி வட்டாட்சியர் ரமேஷ், வாளரமாணிக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு காரில் கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்து, அவற்றை புதுக்கோட்டையில் உள்ள குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைப்பதற்காக சென்றுகொண்டிருந்தார். வன்னியம்பட்டி அருகே சென்றபோது, கே.புதுப்பட்டி அருகே உள்ள மாவடிபட்டியைச் சேர்ந்த கே.விஜயகுமார் உட்பட 2 பேர் அங்கு வந்து, தனி வட்டாட்சியர் ரமேஷ், அவரது கார் ஓட்டுநர் ஏ.கலியபெருமாள் ஆகியோரை தாக்கிவிட்டு, அரிசி மற்றும் காரை எடுத்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து காயம் அடைந்த ரமேஷ், கலியபெருமாள் ஆகியோர் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரிமளம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள விஜயகுமார் உட்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in