நீரை கடந்து மயானத்துக்கு செல்வதில் சிரமம் - சுவேத நதியின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தல் :

தம்மம்பட்டியை அடுத்த கோனேரிப்பட்டி அருகே சுவேத நதியில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீரில் உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்துச் சென்ற மக்கள்.
தம்மம்பட்டியை அடுத்த கோனேரிப்பட்டி அருகே சுவேத நதியில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீரில் உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்துச் சென்ற மக்கள்.
Updated on
1 min read

கெங்கவல்லி அடுத்த தம்மம்பட்டியில் நதி நீரை கடந்துகோனேரிப்பட்டி மயானத்துக்கு சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டியது உள்ளதால், அப்பகுதியில் உள்ள சுவேத நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5 மற்றும் 6-வது வார்டுக்கு உட்பட்ட பெல்ஜியம் காலனி, லூர்துநகர், பாரதிபுரம், கவுண்டர்பாளையம், நாகியம்பட்டி உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுவேத நதியின் மறுகரையில் உள்ள கோனேரிப்பட்டி மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சுவேத நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும்போது, தம்மம்பட்டி வழியாக சில கிமீ சுற்றுப்பாதையில் சென்று சுவேதநதியைக் கடந்து மயானத்துக்கு செல்லும் நிலையுள்ளது. எனவே, கோனேரிப்பட்டியில் சுவேத நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழைகாரணமாக சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெல்ஜியம் காலனியில் மரணமடைந்த ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்கள் சுவேத நதியில்பெருக்கெடுத்து செல்லும் தண்ணீரில் இறங்கி மறுகரையில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, “மழைக்காலங்களில் எங்கள் பகுதியில் யாராவது உயிரிழந்தால், மயானத்துக்கு செல்ல மிகுந்தசிரமம் ஏற்பட்டு வருகிறது. சுவேத நதியில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீரில் சடலத்தை ஆபத்தான நிலையில் எடுத்து செல்ல வேண்டியதுள்ளது. எனவே, கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in