Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM

பணகுடி, பழவூர் பகுதிகளில் குளங்கள் உடைப்பு : கிராமங்களுக்குள் வெள்ளம்: கன்னியாகுமரி நான்குவழி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆலந்துறை ஆற்று வெள்ளம் திருநெல்வேலி- கன்னியா குமரி தேசிய நெடுஞ்சாலையில் கரைபுரண்டதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம், பணகுடி வட்டாரங்களில் நேற்று முன்தினம் இரவில் இடைவிடாது பலத்த மழை கொட்டியது. இந்த மழை நேற்று பகலிலும் நீடித்தது. இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக வடக்கன் குளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் புகுந்து 50-க்கும் மேற்பட்ட குடியிரு ப்புகளை சூழ்ந்தது. அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் இசக்கியப்பன் ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தன. முன்கூட்டியே அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முப்பந்தலை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் ச்சியாக பெய்த கனமழை காரணமாக, பழவூர் பெரியகுளத்துக்கு வரும் இசக்கியம்மன் கோயில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கால்வாய்கள் முறையாக தூர் வாராத காரணத்தாலும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாலம் அகற்றப்பட்டு, நான்கு வழி சாலை அமைக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் வெள்ளம் புகுந்தது. அருகிலுள்ள கிராமங்களிலும் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பழவூர் ஊராட்சி தலைவர் சுப்புலெட்சுமிகுமார் உள்ளிட்டோர் தடுப்பு மற்றும் வடிகால் அமைத்து வெள்ளம் ஊருக்குள் புகாத அளவில் நடவடிக்கை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் மணல்மேடுகள் அமைத்து, பாதிப்பின் தன்மையை குறைக்கும் விதமாக அப்பகுதியைச் சார்ந்த ஓடை வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இந்நடவடிக்கை யின்போது போக்குவரத்து பாதிக்கப் பட்டதால் மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. வெள்ளம் வடிந்தபின் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டதால் பெருங்குடி - வேப்பிலான்குளம்-கும் பிளம்பாடு சாலை துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது.

பணகுடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான ரோஸ்மியபுரம் , தளவாய்புரம், சிவகாமிபுரம், பாம்பன் குளம், லெப்பை குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. ரோஸ்மியாபுரம் புதுக்குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. குளங்களில உடைப்பு ஏற்பட்டதால் அருகிலுள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பணகுடியிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆவரைகுளம் பகுதியில் குளம் உடைப்பெடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிந்து, ராதாபுரம் வட்டாட்சியர் ஜேசு ராஜன், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x