

தென்காசி ரயில்வே மேம்பாலம் அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்ததால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசியில் இருந்து பாவூர் சத்திரம் வழியாக சுரண்டைக்குச் செல்லும் அரசு பேருந்து, நேற்று காலை தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. தென்காசி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கியதும் பேருந்தின் முன்புற டயர் திடீரென வெடித்தது.
உடனடியாக ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தினார். சாலையின் நடுவே பேருந்து நின்றதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. உடனடியாக சம்பவ இடத்துக்கு தென்காசி போக்குவரத்து காவலர்கள் விரைந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மாற்று டயர் பொருத்தப்பட்டு, பேருந்து அங்கிருந்து நகர்த்தப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.