

‘‘மழையால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகாது,’’ என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். தமிழரசி எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: தற்போது உரத் தேவை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் துறைமுகங்களில் உரங்களை ஏற்றுவதிலும், இறக்குவதிலும் சிரமம் உள்ளது. இதனால் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை சரிசெய்ய முதல்வரும், வேளாண்மைத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு வாரத்தில் தட்டுப்பாடு சரிசெய்யப்படும், என்றார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், கண்காணிப்பு அலுவலர்கள் பிரியா, விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக பாகனேரியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்பை பார்வையிட கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நானும் இடம்பெற்றுள்ளேன். முன்கூட்டிய திட்டமிடல், முதல்வரின் துரித நடவடிக்கையால் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு போல், தற்போது பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மேலும் கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. நிச்சயமாக அவற்றையும் விரைவில் முதல்வர் சீரமைப்பார்.
வெள்ள சேதங்களை சரி செய்வதோடு, நீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட அவகாசத்தில் நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தலும் நடத்தப்படும், என்றார்.