Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் - டெங்கு காய்ச்சல் பரிசோதனை வசதி, மருந்துகள் தயார் : மக்கள் பாதுகாப்பாக இருக்க நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தல்

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கு தேவையான மருந்து பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவையாகும். இந்த கொசுப்புழுக்கள் சாக்கடை, கழிவு நீர் கால்வாய்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யாது. எனவே, வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் சிமென்ட் தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசு முட்டையிடாத வகையில் குடிநீர் பயன்படுத்தும் பொருட்களை முழுமையாக மூடி வைக்க வேண்டும்.

வீட்டிற்கு வெளியே உள்ள பயன்படுத்தப்படாத உரல், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், டம்ளர்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதன் மூலம் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதைத் தடுக்க முடியும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகள், பயன்பாட்டில் இல்லாத வீடுகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதன் பொறுப்பாளர்கள் உரிய கால அளவுகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் காய்ச்சல் கண்டவர்களின் பட்டியலை அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரியப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலை பரிசோதிக்க நவீன பரிசோதனை வசதிகளும், தேவையான மருந்து பொருட்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

எனவே, பொதுமக்கள் சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் கூட தாமதிக்காமல் உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை பெறுவதையும், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்கவேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x