Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

எரிபொருள் பரிசோதனைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள - ஜல்லி, மண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் : புதுக்கோட்டை ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் அளித்தது ஓஎன்ஜிசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிபொருள் பரிசோதனைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள ஜல்லி, மண்ணை வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்திக்கொள்ள ஆட்சியரிடம் ஓஎன்ஜிசி நிர்வாகம் இசைவு கடிதம் அளித்துள்ளது.

கறம்பக்குடி, ஆலங்குடி வட்டங்களில் 7 இடங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் பரிசோதனைக்காக 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகளை ஓஎன்ஜிசி அமைத்தது. அதில், எரிபொருள் எடுக்கும் வகையிலான வால்வுகளை 3 இடங்களில் பொருத்தியது. மற்ற இடங்கள் தரையோடு மூடப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் எரிபொருள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் வாணக்கன்காட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறை ஆய்வு செய்த ஓஎன்ஜிசி அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளும் மூடப்பட்டு, நிலங்கள் உரிய விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

அதன்படி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி நிலம் ஒப்படைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கறம்பக்குடி வட்டம் கோட்டைக்காடு, புதுப்பட்டி ஆகிய 2 இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றிவிட்டு, நிலங்கள் உரியவரிடமே ஒப்படைக்கப்பட உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள ரூ.85 லட்சம் மதிப்பிலான ஜல்லி, மண்ணை அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளளாம் என ஆட்சியர் கவிதா ராமுவிடம் ஓஎன்ஜிசி பொதுமேலாளர் சாய்பிரசாத், பொதுமேலாளர் (சிவில்) ரவி, துணை பொது மேலாளர் (மனிதவளம்) ஜோசப்ராஜ், வட்டாட்சியர் தமிமுன்அன்சாரி ஆகியோர் கடிதம் அளித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

இது குறித்து ஓஎன்ஜிசி அலுவலர்கள் கூறியபோது, “வழக்கமாக இதுபோன்று கிணறுகளை மூடும்போது, அங்கு கொட்டப்பட்ட மண், ஜல்லிகளை அகற்றி ஓஎன்ஜிசி நிர்வாகமே பயன்படுத்திக்கொள்ளுவது வழக்கம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் கனமீட்டர் அளவில் உள்ள ஜல்லி, மண்ணை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியரிடம் ஓஎன்ஜிசி சார்பில் இசைவு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x