Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM

ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு - சீரமைப்பு பணியை தீவிரப்படுத்த ஆட்சியர் உத்தரவு :

சேலம்

ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கொட்டிய மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஏற்காட்டில் பெய்த கனமழையால் குப்பனூர் மலைப்பாதையில் மண் சரிவு, மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குப்பனூர் மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு சேதத்தை ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குப்பனூர் சாலையில் 6 கி.மீ., தொலைவுக்கான சாலையில் மண் சரிவு காரணமாக பாறைகள் உருண்டு, சாலை சேதம் அடைந்துள்ளது. சாலையில் நிரம்பி கிடந்த பாறைகளை விரைந்து அப்புறுப்படுத்திட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். பொக்லைன் மூலம் மண் சரிவை சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். மண் சரிவால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் பாதையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மன்னார்பாளையம் மற்றும் கோராத்துப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றதால் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரிசெய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். கோராத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதை பார்வையிட்ட ஆட்சியர் அங்கு வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து தேவையான உதவிகளை மேற்கொள்ள வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

மழை பாதிப்பு குறித்து 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணித்து, பாதிப்புள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஏற்காட்டில் கொட்டிய மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்காடு மழையிலிருந்து வரும் மழை நீர் சேலம் கன்னங்குறிச்சி அடிவாரத்தில் உள்ள புதுஏரியை வந்தடையும். நேற்று முன்தினம் பெய்த மழையால் ஏற்காட்டில் இருந்து காட்டாறு வெள்ளம் ஏற்பட்டு புது ஏரியை அடைந்தது. புது ஏரி நிரம்பினால் அங்கிருந்து மூக்கனேரிக்கு தண்ணீர் வரும். மூக்கனேரி நிரம்பும் நிலையில் உள்ளதால் ஏரி நிரம்பினால் சின்னதிருப்பதி ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படும் நிலை இருந்தது.

இதனால், புது ஏரியில் இருந்து மழை நீர் நேரடியாக திருமணிமுத்தாற்றுக்கு செல்லும் வகையில் அதிகாரிகள் தண்ணீரை திருப்பி விட்டனர். இதனால், திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதை மாநகர மக்கள் பார்த்து ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x