தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க - திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் :

தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க -  திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் :
Updated on
1 min read

தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திருச்சியில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன்கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் கன்டோன்மென்ட் சோனா மீனா தியேட்டர், மன்னார்புரம் ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்படி தஞ்சாவூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் சோனா, மீனா தியேட்டர் அருகில் இருந்தும், புதுக்கோட்டை வழிடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மன்னார்புரம் கல்லுக்குழி சாலையில் இருந்தும், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை வழித்தடத்தலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னார்புரம் வந்து, பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்ல வேண்டும்.

மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எவ்வித மாற்றமுமின்றி, வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மன்னார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்குச் சென்று வருவதற்காக, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அதிகஅளவிலான நகரப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் நவ.7 வரை செயல்படும்.

இவற்றை மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எக்காரணத்தைக் கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் எவ்வித வாகனங்களையும் நிறுத்தக் கூடாது. பேருந்துகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது. வேன், கார் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது.

பட்டாசு வியாபாரம் செய்பவர்கள், அதற்கென அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும். தள்ளுவண்டி மற்றும் தரைக்கடையில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. இந்த விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரில் எங்கேனும் விதிமீறல் காணப்பட்டால் அதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கும், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 96262 73399 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in