எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தி - தாலுகா மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி : மருத்துவ அலுவலர்களுக்கு எம்.பி திருநாவுக்கரசர் அறிவுறுத்தல்

எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தி -  தாலுகா மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி  :  மருத்துவ அலுவலர்களுக்கு எம்.பி திருநாவுக்கரசர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தி அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் வசதி ஏற்படுத்த மருத்துவ அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சு.திருநாவுக்கரசர் எம்.பி அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மின்னணு வேளாண் சந்தை, நுண்ணீர் பாசன திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், பிரதமர் குடியிருப்பு திட்டம், மதிய உணவுத் திட்டம் உட்பட 38 திட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பேசியபோது, “இதுபோன்ற கூட்டங்களில் வழங்கப்படும் கையேடை ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே கொடுக்க வேண்டும்’’ என்றார்.

கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை பேசும்போது,“தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை குறைக்காமல் வழங்கவும் வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கும் பொதுநிதியை அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்க வேண்டும்’’ என்றார்.

அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் பேசும்போது, “பொதுமக்களிடம் வாங்கி கொடுக்கப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

மேலும், எம்.பி, எம்எல்ஏக்களுக்கு வளர்ச்சி நிதி ஒதுக்கப்படுவதைப் போன்று ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் தனியாக நிதி ஒதுக்க வேண்டும்.

நிதி இல்லாததால் ஊரக பகுதியில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என ஒன்றியக் குழுத் தலைவர்கள் பேசினர்.

இதைத்தொடர்ந்து, திருச்சி எம்.பி. சு.திருநாவுக்கரசர் பேசியது: கிராமங்களில் அதிகமானோர் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்படுவதால் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று இது குறித்து பரிசோதனை செய்ய வேண்டும்.

எங்களின் தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தி அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் வசதி ஏற்படுத்த மருத்துவ அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசின் திட்டங்களை பரவலாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், எம்எல்ஏ வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in