Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM

சிறுவாச்சூர் பெரியசாமி கோயிலில் - மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு :

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் துணைக் கோயிலான பெரியசாமி கோயில், சிறுவாச்சூர் அருகே பெரியசாமி மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுடு மண்ணால் ஆன சுவாமி, பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. இக்கோயிலில் அக்.6-ம் தேதி 5-க்கும் மேற்பட்ட சுடு மண் சிற்பங்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இந்நிலையில் மீண்டும் பெரியசாமி மலையில் உள்ள சுடுமண்ணால் ஆன 20 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை, செங்கமல சுவாமி சிலை, குரப்புள்ளையான் சிலை, வாகனங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது நேற்று தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி சஞ்சீவிகுமார் தலைமையில் வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

சிறுவாச்சூர் பகுதியில் அடிக்கடி கோயில் சிலைகள் உடைப்பு சம்பவம் நிகழ்வதால், இப்பகுதியில் கண்காணிப்புக் கேமரா நிறுவுவதுடன், இரவு நேர காவலாளிகளும் நியமிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரியசாமி கோயிலில் ஏற்கெனவே சிலைகளை உடைத்ததாக நடராஜன் என்கிற நாதன் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாதன் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் சிலை உடைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் சந்தேகத்தின்பேரில், நாதனை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாலை மறியல்

பெரியசாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டதைக் கண்டித்து இந்து அமைப்பினர் நேற்று சிறுவாச்சூர் பேருந்து நிறுத்தம் அருகே திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்து முன்னணி கோட்டச் செய லாளர் குணசேகர் தலைமை வகித்தார். இதில், பாஜக மாவட்டச் செயலாளர் குரு ராஜேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் முத்தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x