சேலத்துக்கு சரக்கு ரயிலில் 1,250 டன் உரம் வருகை :

ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டை சரக்கு ரயில் நிலையத்துக்கு வந்த உரம் மூட்டைகளை ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்ட  தொழிலாளர்கள்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டை சரக்கு ரயில் நிலையத்துக்கு வந்த உரம் மூட்டைகளை ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
Updated on
1 min read

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு விநியோகம் செய்ய டை அமோனியம் பாஸ்பேட் உரம், என்.கே.பி., (16:16:16) காம்ப்ளக்ஸ் உரம் உள்ளிட்ட 1,250 டன் உரம் சரக்கு ரயிலில் சேலம் வந்தது.

பருவமழைக் காலம் என்பதால், தமிழகத்தில் விவசாய சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் நெல், வாழை, மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் பெரும்பான்மையோர் சாகுபடியை மேற்கொண்டுள்ளதால், பயிர்களுக்கான உரத்தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சில வகை உரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் உரம் தேவையைப் பூர்த்தி செய்ய ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டை சரக்கு ரயில் நிலையத்துக்கு நேற்று உரம் ஏற்றிய சரக்கு ரயில் வந்தது.

இதில், இண்டியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து டை அமோனியம் பாஸ்பேட் உரம், என்.கே.பி., (16:16:16) காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 1,250 டன் உரம் வந்தது. இவை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரம் விற்பனை நிலையங்களுக்கு பிரித்து லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in