

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விவரம்: உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்றவர்களாக அறிவித்து, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்டத் தலைநகரங்களில் உணவு வசதியுடன் சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டித்தர வேண்டும். சிறப்புகவனம் செலுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஏஐடியூசி தெருவியாபாரிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்மாவட்ட தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமையில் வியாபாரிகள் அளித்த மனுவில், ‘தெருவோரம் தள்ளுவண்டி கடைகள் மூலம்வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பயோமெட்ரிக் அட்டை வழங்க வேண்டும்’ எனக் கோரியிருந்தனர்.
தமிழ்தேச தன்னுரிமை கட்சிமாவட்ட தலைவர் வியனரசு அளித்தமனுவில், ‘பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முதலில் ஆங்கிலத்திலும், 2-வதாக தமிழிலும் பாளையங்கோட்டை பஸ் நிலையம் என்று எழுதப்பட்டுள்ளது. இதை அகற்றிவிட்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து பெயர் பலகை வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.