Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியமான மனநிலை அவசியம் : மனநல மருத்துவர் ஆலோசனை

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட மனநல திட்டம் சார்பில் கொல்லிமலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் முகாம் நடைபெற்றது. மனநல மருத்துவர் வெ.ஜெயந்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமான மனநிலை தேவை. அக்காலகட்டத்தில் தாயின் மனநலம் பாதிக்கப்பட்டு மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும்.

குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பிரசவ வலி ஏற்பட்டால் குழந்தையின் ஆற்றல் மற்றும் சிந்திக்கும் திறனில் தடை ஏற்படலாம். குழந்தை பெற்றோர்களின் முகம் கண்டு சிரிக்காமல் இருத்தல், மற்ற குழந்தைகளுடன் சரிவர பழகாமல் இருத்தல், திரும்பத்திரும்ப ஒரேவிதமான அசைவு செய்தல் ஆகியவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த பயிற்சிகள் வழங்கும்போது குழந்தையின் இயங்கும் முறையை மேம்படுத்த முடியும்.

மன அழுத்தம் என்பது எதிர்பாராத மாற்றங்களை, சவால்களை சந்திக்கும் போது ஏற்படுகிறது. உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் எண்ணங்களின் மூலமாகவும், நடத்தை மாற்றமாகவும் வெளிப்படும். இவை ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தசை இறுக்க மற்றும் தளர்வு பயிற்சி, கை தட்டல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மனநல ஆலோசகர் ரமேஷ் மற்றும் உளவியலாளர் அர்ச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x