அதிமுக, பாமக கவுன்சிலர்கள் ஆதரவோடு - திமுக கவுன்சிலர் ஒன்றிய குழுத்தலைவராக தேர்வு : மறைமுக தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சாலை மறியல்

ஓன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கீதா.
ஓன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கீதா.
Updated on
2 min read

ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவராக திமுக கவுன்சிலர் சங்கீதா தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 9-ம் தேதி நடை பெற்றது. இத்தேர்தலில் 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்கள், பாமக 2 இடங்கள், ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்றனர். திமுக 11 இடங்களை கைப்பற்றியதால் ஒன்றியக்குழுத்தலைவராக திமுக கவுன்சிலர்களின் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க் கப்பட்டது.

இந்நிலையில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜியின் மருமகளும் 7-வது வார்டு கவுன்சிலருமான காயத்ரி ஒன்றியக்குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க சில கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் ஆதரவுடன் 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ஒன்றியக் குழுத்தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என சில கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால், ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவினரிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இந்நிலையில், ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. மறைமுக தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் ஆலங்காயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

மறைமுக தேர்தலில் தேர்தல் அதிகாரி, உதவித்தேர்தல் அதிகாரி, ஆலங்காய ஒன்றிய கவுன்சிலர்கள் 18 பேர் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் காலை 6.30 மணிக்கே ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார். 7-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி காலை 9.30 மணிக்கு தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் வந்தார்.

இதனைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஒன்றியக்குழுத் தலைவரை தேர்ந்தெடுக்க கவுன் சிலர்களுக்கு தேர்தல் அலுவலர் அழைப்பு விடுத்தார். அப்போது, ஒன்றியக்குழுத்தலைவர் பதவிக்கு சங்கீதா தான் போட்டியிடுவதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து, காயத்ரியும் போட்டியிடுவதாக தெரி வித்தார். அதன்பிறகு, சங்கீதா ஆதரவு கவுன்சிலர்களுக்கு முதலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைக் கண்டித்த காயத்ரி மறைமுக தேர்தல் முறையாக நடக்கவில்லை, முறைகேடு நடக்கிறது என குற்றஞ்சாட்டி தனது ஆதரவாளர்கள் 6 கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சங்கீதாவுக்கு ஆதரவாக 5 திமுக கவுன்சிலர்கள், 4 அதிமுக கவுன்சிலர்கள், 2 பாமக கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை கவுன்சிலர் என 12 பேர் வாக்களித்தனர். காயத்ரியுடன் 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால், 12 வாக்குகள் பெற்ற சங்கீதா ஒன்றியக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதற்கிடையே, காயத்ரி தனது ஆதரவாளர்களுடன் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, திமுக இளை ஞரணி நிர்வாகி திருநாவுக்கரசு என்பவர் தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே, காவல் துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, மறைமுக தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. காலை 10 மணிக்கு தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், முறை கேடு குறித்து காயத்ரி தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் சேர்ந்து வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனு மீது விசாரணை நடத்துவதாக அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதன்பிறகு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிமுக, பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவோடு 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ஒன்றியக்குழுத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in