ரத்து செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டத்தை மீண்டும் நடத்தக்கோரி கிராம மக்கள் மனு :

ரத்து செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டத்தை  மீண்டும் நடத்தக்கோரி கிராம மக்கள் மனு :
Updated on
1 min read

ரத்து செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டத்தை மீண்டும் நடத்தக்கோரி திருச்செங்கோடு தாலுகா கோக்கலை கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தியிடம் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோக்கலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் கல் குவாரிகள் மற்றும் கிரசர்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2020 ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதன்பேரில் கல் குவாரிகள் மற்றும் கிரசர்கள் இயங்குவதை தடை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், அத்தீர்மானம் தற்போது வரை அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து கடந்த காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம சபைக் கூட்டத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

எனவே, எங்கள் கிராமத்தில் ஆட்சியர் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். அக்கூட்டத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட கல்குவாரி தடை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in