பாபநாசம் அணையிலிருந்து 2,989 கனஅடி தண்ணீர் திறப்பு - தாமிரபரணி ஆற்றில் கரைபுரளும் வெள்ளம் :

திருநெல்வேலியில் குறுக்குத்துறை  தாமிரபரணி கரையிலுள்ள முருகன் கோயில் மண்டபத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு நேற்று பிற்பகலில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 	                   படம்: மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் குறுக்குத்துறை தாமிரபரணி கரையிலுள்ள முருகன் கோயில் மண்டபத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு நேற்று பிற்பகலில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. படம்: மு. லெட்சுமி அருண்
Updated on
2 min read

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தாமிரபரணியில் நேற்று 2-வது நாளாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீடித்த மழையால் பாபநாசம் அணைக்கு நேற்று காலையில் விநாடிக்கு 6,530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 136.40 அடியாக இருந்தது.

தாமிரபரணியில் வெள்ளம்

இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.06 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 8 அடி தண்ணீர் மட்டுமே தேவை. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,248 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 76.20 அடியாக இருந்தது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 50.50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 320 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைப்பகுதியில் 15 மி.மீ., சேர்வலாறு அணைப்பகுதியில் 6 மி.மீ., சேரன்மகாதேவியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பாபநாசம் தலையணை, களக்காடு தலையணை பகுதிகளில் குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்வதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் குறுக்குத்துறையில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள முருகன் கோயில் மண்டபத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு நேற்று பிற்பகலில் தண்ணீர் பாய்ந்தோடியது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம்இரவே சுவாமி உற்சவர் சிலையைஇங்கிருந்து எடுத்துச் சென்று கோயில் அருகேயுள்ள மேலக்கோயிலில் பாதுகாப்பாக வைத்தனர். இது போல் கோயிலின் உள்ளே இருக்கும் முக்கிய பூஜைபொருட்களும், ஆவணங்களும் மேலக்கோயிலுக்கு மாற்றப்பட்டன.

தென்காசி

தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கடனாநதி அணைக்கு விநாடிக்கு 329 கனஅடி நீர் வந்தது. அணையில்இருந்து 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 2 அடி உயர்ந்து81.00 அடியாக இருந்தது. ராமநதிஅணைக்கு 135 கனஅடி நீர் வந்தது.அணையில் இருந்து 30 கனஅடி நீர்வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் இரண்டரை அடி உயர்ந்து 72.50 அடியாக இருந்தது. கருப்பாநதி அணைக்கு 142 கனஅடி நீர் வந்தது.25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63.98 அடியாக இருந்தது.

குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. குண்டாறு அணைக்கு வரும் 110 கனஅடி நீர், அடவிநயினார் அணைக்கு வரும் 240 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

குற்றாலம் அருவிகளில் 2 நாட்களாக நீடித்த வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in