

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் பாலப் பணி பாதுகாப்பின்றி நடந்து வருவதால் மூன்று நாட்களில் 3 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
காரைக்குடி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதற்காக திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி அருகே சாலையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து சாலையின் ஒருபுறம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மறுபுறம் வாகனங்கள் செல்வதற்காக இடம் விடப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்கள் செல்லும் பகுதியில் மண் மேவி மழையில் சேரும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அடிக்கடி கனரக வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்கின்றன.
அப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள், முன்னெச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் விளக்குகளும் இல்லை. இதனால் கடந்த மூன்று நாட்களில் மூன்று விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் காயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலப்பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.