Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை - குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு :

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 5 மி.மீ., குண்டாறு அணையில் 3 மி.மீ. மழை பதிவானது.

நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், குற்றாலம், கடையம், பாவூர்சத்திரம், சுரண்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பல இடங்களில் இடைவிடாது மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உட்பட அனைத்து அருவி களிலும் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் நெல் அறுவடைப் பணிகளும், கீழப்பாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய வெங்காயம் அறுவடைப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெங்காயத்துக்கு போதிய விலையில்லாததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

அடவிநயினார் அணை, குண்டாறு அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.12 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி, பாளையங் கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலையில் மிதமான மழை பெய்தது. பிற் பகலில் சாரல் நீடித்தது. மழையால் சாலையோர ங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

பாபநாசத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 235 மி.மீ. மழை கொட்டியுள்ளது. இதுபோல் மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. மழை யளவு (மி.மீட்டரில்):

மணிமுத்தாறு- 90.60, அம்பா சமுத்திரம்- 67, சேரன்மகாதேவி- 14, நாங்குநேரி- 13, ராதாபுரம்- 9, திருநெல்வேலி- 15.50.

தாமிரபரணியில் குளிக்கத் தடை

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் அதிக மழைப்பொழிவால் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 125. 4 அடியாகவும், சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 149.11 அடியாகவும் உயர்ந்துளது.

நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 1,500 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கடனா அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆற்றில் உபரி நீர் திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மழை இடர்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளித்திட 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0462 - 250 1070-ல் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x