தவறு செய்வோருக்கு சட்டப்படியே தண்டனை - போலீஸார் என்கவுன்ட்டர் செய்வதை ஏற்க முடியாது : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து
தவறு செய்வோருக்கு சட்டப்படியே தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும், என்கவுன்ட்டர் செய்வதை விடுதலை சிறுத்தைகள் ஏற்காது எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். பாஜகவுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் வழங்கும் சூழலைத் தடுக்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பெற்ற வெற்றியை, விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகை என பார்க்க முடியாது. அரசியலுக்கு யாரும் வரலாம். விஜய் வந்தாலும் அவரை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கும். பாஜகவுடன் இணைந்திருக்கும் வரை அதிமுகவுக்கு சரிவு தொடரும்.
எண்ணெய் நிறுவனங்களை அரசே ஏற்றால்தான் பெட்ரோல், டீசல் விலை குறையும். நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த, குற்றப் பின்னணி உடையவர்களை காவல்துறையினர் கைது செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அதேசமயம் என்கவுன்ட்டர் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. இதை ஒருபோதும் எங்கள் கட்சி ஏற்காது.
எத்தனை கொலை வழக்கில் ஈடுபட்டிருந்தாலும், சட்டப்பூர்வமாக விசாரித்து அவர்களுக்கு சட்டப்படியே தண்டனை பெற்றுத்தர வேண்டும். தேசிய அளவில் மது விலக்கு கொள்கை கொண்டு வரப் பட வேண்டும் என்றார்.
