

சேலம்: சேலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா தலைமையிலான போலீஸார் மாநகரம் முழுவதும் ரோந்து சென்றும், சோதனைச்சாவடிகளில் முகாமிட்டு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து முட்டைகோஸ் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தனர். இதில், வாகனத்தின் மேல் பகுதியில் முட்டை கோஸ் பாரமும், அடியில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 40 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக மைசூரைச் சேர்ந்த ஓட்டுநர் விவேக்ராஜ் (29), மைசூர் ராஜீவ்நகர் ஜூனைத்கான் (23) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.