Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் - கோவையில் 5 மாதங்களில் 16,754 பேர் பயன் :

கோவை

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கோவையில் கடந்த 5 மாதங்களில் 16,754 பேர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலம் கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ், கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் இதுவரை இருதயநோய், தோல்நோய், நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், எலும்பியல், குழந்தை மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 16,754 பயனாளிகளுக்கு ரூ.48.07 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. தங்களின் பழைய காப்பீட்டு அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள www.cmchistn.com/ என்ற இணையதளத்தில், ‘என்ரோல்மென்ட்’ என்பதன் கீழ் உள்ள ‘மெம்பர் செர்ச்/ இ கார்டு’ என்பதை கிளிக் செய்து, ‘யுஆர்என் நம்பர்’ என்பதில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை எண்ணையும், பழைய ரேஷன் அட்டை எண்ணையும் பதிவிட்டால் உங்களின் விவரம் வரும். அதில், பாலிசி எண்ணை கிளிக் செய்தால் குடும்ப உறுப்பினர்கள் விவரம், காப்பீட்டு திட்ட தொகை ஆகிய தகவல்கள் இருக்கும். அந்த பக்கத்தின் மேற்பகுதியில் ‘ஜெனரேட்- இ கார்டு’ என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் பார்கோடுடன் கூடிய, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையின் மின் அட்டை (இ-கார்ட்) கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இணையதளத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட அலுவலகத்துக்கு நேரடியாக வந்து காப்பீட்டு திட்ட அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம். வரும்போது பழைய ரேஷன் அட்டை, கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டையை எடுத்துவர வேண்டும்.

ஒருவேளை அந்த அட்டை செயல்பாட்டில் இல்லையெனில், புதிதாக விண்ணப்பிக்க படிவம் அளிக்கப்படும். அரசு அனுமதி அளித்துள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறோம் என்பதைச் சொல்லிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால், எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அரசே முழு சிகிச்சைக் கட்டணத்தையும் ஏற்கும். இவ்வாறு சிகிச்சைக்கு செல்வோர் பழைய, புதிய குடும்ப அட்டைகள், முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை, நோயாளியின் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x