

தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ளது. இங்கு வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பாதைகளில் ஆங்காங்கே புதிதாக சிறிய அருவிகள் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இங்கு கடந்த 10-ம் தேதி 36 மிமீ மழையும், நேற்று முன்தினம் (11-ம் தேதி) 56.8 மிமீ மழை பதிவானது. தொடர் மழை காரணமாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையின் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், சாலையின் ஒரு பகுதி சரிந்ததால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கார்கள் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் அடுத்தடுத்து சென்றால் நிலச்சரிவு மேலும் அதிகமாகும் நிலை நிலவியது. இதையடுத்து, வாகனங்கள் இச்சாலையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாறாக குப்பனூர், அயோத்தியாப்பட்டணம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை சேலம் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏற்காடு மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் குப்பனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை துறையின் சார்பில் குழுக்கள் அமைத்து நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணியை இரு நாட்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணி முடியும் வரை மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. எனவே, ஏற்காடு வரும் பயணிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலை கள் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் துரை, உதவி கோட்டப் பொறியாளர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் ராஜேஷ்குமார், ஏற்காடு வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.