Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் - 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலிலும் திமுக வெற்றி : திருச்சி மாவட்டத்தில் 3 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்றியது திமுக

திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 5 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.

திருச்சி மாவட்டத்தில் 19 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 2 ஊராட்சித் தலைவர்கள் என மொத்தம் 24 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 10 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், எஞ்சிய 14 பதவியிடங்களுக்கான தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெற்றது. இதில், 74.08 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

தொடர்ந்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ப.செல்லமணி 1,872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த ரா.ஜானகி 1,670 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ச.சபியுன்நிஷா 2,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த த.கனகவள்ளிக்கு 1,628 வாக்குகள் கிடைத்தன. துறையூர் ஒன்றியம் 13-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் வை.முருகேசன் 2,570 வாக்குகள் பெற்று அதிமுகவைச் சேர்ந்த சே.அபிராமியை தோற்கடித்தார். அபிராமிக்கு 1,156 வாக்குகள் கிடைத்தன. மேலும், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அ.கண்ணையன் 18,762 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தானேஷ் (எ) ந.முத்துக்குமாருக்கு 6,571 வாக்குகள் கிடைத்தன.

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 3,878 வாக்குகளில் திமுக வேட்பாளர் ரா.நவீன்ராஜ் 2,389 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் அ.செல்வராஜை பெற்ற 1,389 வாக்குகளை விட 1,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் சீ.பழனியப்பன் வெற்றி பெற்றார். மேலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை மாவட்டக் குழு உறுப்பினர் (9-வது வார்டு) பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கை.பழனிசாமி 22,645 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் பா.அழகுசுந்தரியை விட 12,934 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அழகுசுந்தரிக்கு 9,811 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மா.சாந்தார் 515 வாக்குகளை பெற்றார்.

திருமயம் ஒன்றியத்தின் 5-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பொன்.பன்னீர்செல்வத்தைவிட (1,360), திமுக வேட்பாளர் கா.சுப்பிரமணியன் (2,015) 655 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ச.அர்ச்சனாதேவி 47 வாக்குகளே பெற்றார்.

காலியாக இருந்த 5 ஊராட்சித் தலைவர்களில் கீழத்தானியம் ஊராட்சி மன்றத் தலைவராக த.நல்லையா ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கீழப்பனையூர் ஊராட்சித் தலைவராக ஆர்.பழனியப்பன், மாங்காடு செ.ஜானகி, அரசமலை ரா.பழனிவேல், மறவாமதுரை அ.அடைக்கன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 41 ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 33 உறுப்பினர்கள் போட்டியின்றியும், 8 பேர் தேர்தல் மூலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 3 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் நடைபெற்ற தேர்தலில், வேப்பந்தட்டை ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக சத்தியபாமா, வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினராக உதயமன்னன், வேப்பூர் ஒன்றியம் ஆடுதுறை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக பன்னீர் செல்வம் ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 3 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 11 பேரும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 27 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர் ஊராட்சி மன்றத் தலைவராக சி.குமாரி, தா.பழூர் ஒன்றியம் மணகெதி ஊராட்சி மன்றத் தலைவராக பெ.பழனிவேல், நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்றத் தலைவராக தி.ராசாராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும், 9 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x