Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

வாக்கு எண்ணும் மையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் - ஆம்பூரில் அரசு ஊழியர்கள் கடும் அவதி :

ஆம்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் அரசு ஊழியர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடந்த 9-ம் தேதி பதிவான வாக்குகள் ஆம்பூர் ஆனைக் கால் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கை மையத் தில் கழிப்பறை வசதிகள் போதிய அளவு இல்லாததால் பணி யாளர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு போதிய அளவு உணவும் ஏற்பாடு செய்யப் படாததால் உணவு கிடைக் காமல் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மாலை 4 மணி அளவிலும் அவர்களுக்கு உணவு கிடைக்காததால் தேநீர் , போண்டா போன்ற சிற்றுண்டிகளை உண்டு தங்கள் பசியை போக்கிக் கொண்டனர்.

செய்தியாளர்கள் தர்ணா

ஆம்பூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர் களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. வேட்பாளர்கள் வெற்றி பெற்று விட்டு சான்றிதழை பெற்று சென்றுவிட்ட போதிலும் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் செய்தியாளர்களுக்கு மாலை 3 மணி ஆகியும் தகவல் கள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தேர்தல் அலுவலர் மற்றும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

மேலும் செய்தியாளர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. முதலில் சேறும் சகதியுமான இடத்தில் பந்தலின் கீழ் நாற்காலிகள் போடப்பட்டு அந்த இடத்தில் அமருமாறு தெரிவித்தனர். சேறும் சகதியுமான இடத்தில் அமர மாட்டோம் என செய்தியாளர்கள் கூறியதைத் தொடர்ந்து வேறு அறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. செய்தியாளருக்கு குடிநீர் மற்றும் உணவு சரிவர வழங்கப் படவில்லை.

அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். செய்தியாளர்களுக்கு உடனடியாக வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்களை உடனே வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். உரிய விவரங்கள் உடனடியாக வழங்குவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து செய்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்ட னர். இருப்பினும், செய்தியாளர்களுக்கு உரிய தகவல்கள் அலுவலர்களால் வழங்கப்படவில்லை.

முன்னதாக காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு காவல் துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியரின் அனுமதி கடிதத்தை காட்டியும் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு சிறிது நேரம் செய்தியாளர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர் , ஆனாலும், வாகனங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x