Published : 12 Oct 2021 03:14 am

Updated : 12 Oct 2021 03:14 am

 

Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

காரைக்குடி நகராட்சியில் - அங்கன்வாடி ஊழியர் கரோனா தடுப்பூசி செலுத்தியதாக சர்ச்சை : மாவட்ட ஆட்சியரிடம் புகார்

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்த தயாரான அங்கன்வாடி மைய ஊழியர்.

காரைக்குடி

காரைக்குடி நகராட்சியில் அங்கன்வாடி மைய ஊழியர் கரோனா தடுப்பூசி செலுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசிகளை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர் மூலமே பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை சில நிமிடங்கள் அங்கேயே அமர வைத்து, உடலில் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அனுப்ப வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் மருத்துவர்களோ, செவிலியர்களே இல்லாமல் அங்கன்வாடி மைய ஊழியரே பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் உமாநாத் புகார் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: ஏற்கெனவே அங்கன்வாடி மைய ஊழியர்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கன்வாடி மைய ஊழியரை தடுப்பூசி செலுத்த பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ஆட்சியரின் வாட்ஸ் ஆப்பிற்கு புகார் அனுப்பியுள்ளேன்,’ என்றார்.

இதுகுறித்து காரைக்குடி நகராட்சி ஆணையர் சுதா கூறுகையில், ‘‘ சர்ச்சை எழுந்துள்ள மையத்தை நான் ஆய்வு செய்தேன். அங்கு செவிலியர்கள் தான் தடுப்பூசி செலுத்தினர். அங்கன்வாடி மைய ஊழியர் கரோனா தடுப்பூசி செலுத்தியதாகக் கூறுவது பொய். ஊசியை எடுப்பது போல் வேண்டுமென்றே புகைப்படம் எடுத்துள்ளனர்,’’ என்றார்.

கரோனா தடுப்பூசி மருந்தின் அளவை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே கண்காணிக்க முடியும். இதனால் இதுபோன்ற பணிகளில் இதர பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது எனக் கோரிக்கை எழுந்துள்ளது.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

110 :

இன்றைய செய்தி

More From this Author

x