Published : 10 Oct 2021 03:18 AM
Last Updated : 10 Oct 2021 03:18 AM

ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் - திருச்சி 74.08%, அரியலூர் 78.68%, புதுகை 69.78%கரூர் 82.36%, பெரம்பலூர் 77.42% வாக்குப்பதிவு :

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 14 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 74.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு, மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு, துறையூர் ஒன்றியம் 13-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள், சிறுமருதூர், கீழரசூர் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் மற்றும் 19 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 24 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், எஞ்சிய மொத்தமுள்ள 14 பதவியிடங்களுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 14 பதவியிடங்களுக்கும் ஆண்கள் 10,691 பேர், பெண்கள் 16,057 பேர் என மொத்தம் 21,748 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,603 பேர் (71.12 சதவீதம்), பெண்கள் 8,509 பேர் (76.96 சதவீதம்) என மொத்தம் 16,112 பேர் வாக்களித்துள்ளனர். இது 74.08 சதவீதம் ஆகும்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி தலைவர் மற்றும் 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

10 பதவிகளுக்கான தேர்தலில் வாக்களிக்க 20,432 ஆண்கள், 22,231 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 42,667 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் ஆண்கள் 16,643 பேர், பெண்கள் 18,497 பேர், இதரர் 1 என மொத்தம் 35,141 பேர் வாக்களித்துள்ளனர். இது 82.36 சதவீதமாகும்.

கரூர் மாவட்டம் வெள்ளியனை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூனம்பட்டி, மொ.தொட்டம்பட்டி, தொட்டியாப்பட்டி ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்....

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர், திருமயம் ஒன்றியம் 5-வது வார்டு உறுப்பினர், 5 ஊராட்சி மன்றத் தலைவர், 41 ஊராட்சி மன்ற உறுப்பினர் என மொத்தம் 48 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், கீழத்தானியம் ஊராட்சி மன்றத் தலைவராக த.நல்லையா மற்றும் 33 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 14 பதவிகளுக்கு 47பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 145 வாக்குச்சாவடிகளில் பதற்றமான 20 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 69.78 சதவீத வாக்குகள் பதிவாகின. மாங்காடு ஊராட்சியில் வாக்காளர்களுக்கு நேற்று அதிகாலையில் இலவசமாக வழங்கப்பட்ட சேலைகளை வடகாடு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில்....

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி தலைவர் பதவிகள், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள 12 பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இவற்றில்,மொத்தமுள்ள 11,332 வாக்காளர்களில் 8,916 பேர் வாக்களித்தனர். இது 78.68 சதவீதமாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில்....

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர், 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், ஊராட்சித் தலைவர், 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 3 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்,77.42 சதவீத வாக்குகள் பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x