Published : 10 Oct 2021 03:19 AM
Last Updated : 10 Oct 2021 03:19 AM

9 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - நெல்லை, தென்காசியில் அமைதியான வாக்குப்பதிவு :

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 2,069 பதவிகளில் முதற் கட்டமாக 1,113 பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.

மாவட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இத் தேர்தலில் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 27 பேர், 60 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 307 பேர், 89 கிராம ஊராட்சி த்தலைவர் பதவிக்கு 390 பேர், 801ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,792பேர் என மொத்தம் 2,516 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

2-ம் கட்ட தேர்தலுக்காக 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 567 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 151 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டதால் அங்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

39 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் அலுவலர்கள் கண்காணித்தனர். 36 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

76 தேர்தல் நுண் பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முறைகேடுகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 5 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவினர் பல்வேறு வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தேர்தலையொட்டி 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பல வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தன்னார்வலர்கள் உதவி செய்தனர்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம் கீழக்கருவேலன்குளம் வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி சீட்டு வழங்கப்பட்ட இருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பொதுமக்களும், மாலை 5 மணியிலிருந்து 6 மணிவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

நேற்று பிற்பகல் 3 மணிவரை களக்காடு ஒன்றியத்தில் 52.14 சதவீதம், நாங்குநேரி ஒன்றியத்தில் 52.02 சதவீதம், ராதாபுரம் ஒன்றியத்தில் 48.03 சதவீதம், வள்ளியூர் ஒன்றியத்தில் 49.28 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள நிலையில் முதற்கட்டமாக கடந்த 6-ம் தேதி ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.

கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில், 6 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 60 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 103 ஊராட்சித் தலைவர்கள், 849 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,018 பதவியிடங்களில் 5 ஊராட்சித் தலைவர்கள், 194 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 199 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எஞ்சிய 819 பதவிகளுக்கு 2,643 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 574 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். நுண் பார்வையாளர்கள் 46 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 56 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தியும், மற்ற 518 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணிக்கப்பட்டது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் பணியில் 4,630 வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் ஒன்றியம் இடைகாலில் உள்ள மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவை தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் பார்வையிட்டார்.

மாலை 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சங்கரன்கோவில் ஒன்றியம், களப்பாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் உள்ள வாக்குச்சாவடி எண் 96-ல் மாலை 5 மணிக்கு வாக்களிக்க வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x