Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

கடம்பூரில் கோயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு - வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் : ஈரோடு ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

கடம்பூர் மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின் வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமையிலான நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கம்பத்ராயன் கிரிராமன் கோயிலில், கடந்த 4-ம் தேதி, சில சமூக விரோதிகள் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிகழ்வை ஒட்டி, வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த, 7-ம் தேதி கடம்பூரில் மறியல் போராட்டம் நடந்தது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்வதில் தாமதம் ஏற்படுவதால், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்கிறது. எனவே, அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அப்பகுதியில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தவிர, அங்கு சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை காக்கும் வகையிலான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x