Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM

சேலம் மருத்துவரிடம் - ஆன்லைன் மூலம் ரூ.23.35 லட்சம் மோசடி :

சேலம் மருத்துவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.23.35 லட்சம் மோசடி செய்தவர்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம் ராஜாஜி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜெகதீசன். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக பணபலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதனுடன் உள்ள ஆப்பை டவுன்லோடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை நம்பிய ஜெகதீசன் கடந்த இரு மாதமாக ரூ.23 லட்சத்து 35 ஆயிரம் வரை பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில், முதலீடு பணத்தை திரும்பப் பெற முடிவு செய்து, தொடர்புடைய நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அப்போது, தான் அவர் ஏமாந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக ஜெகதீசன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்கு எண்களை அனுப்பி ஜெகதீசனிடம் பணத்தை பறித்தது தெரிந்தது. மேலும், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.1.19 லட்சம் மோசடி

சேலம் அடுத்த நாகியம்பட்டி வெடிகாரன்புதூரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சுரேஷ்குமார் (27) செல்போன் உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் கடைக்கு தேவையான செல்போன் உதிரிபாகங்களை ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார்.

மேலும், உதிரிபாகங்களுக்கான தொகையை கூகுள்-பே, ஏடிஎம் கார்டு மூலமாக ரூ.1.19 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், ஆர்டர் செய்த உதிரிபாகங்களை தொடர்புடைய நிறுவனத்தினர் வழங்கவில்லை.

இதுதொடர்பான புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலி நிறுவனம் பெயரில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x