Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM

மாதனூர், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் நாளை - 2-ம் கட்ட தேர்தலுக்கு 385 வாக்குச்சாவடிகள் தயார் : தேர்தல் பணியில் 3,121 அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர்

மாதனூர், ஆலங்காயம் ஒன்றியத்தில் நாளை 2-ம் கட்ட தேர்தல் நடை பெறுவதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர் காமராஜ் முன்னிலையில் கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அருகில், ஆட்சியர் அமர் குஷ்வாஹா உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றி யங்களில் 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 385 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 3,121 அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படு கிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் நாளை (9-ம் தேதி) நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியத்தில் 385 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3,121 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் கணினி முறையில் தேர்வு செய்து அதற்கான பணி ஆணைகள் நேற்று தயார் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் 385 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியப்பகுதிகளில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 4 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 16 பேரும், 42 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 41 இடங்களுக்கு 140 பேரும், 71 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 70 இடங்களுக்கு 288 பேரும், 591 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 75 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 516 பதவிகளுக்கு 1,723 பேர் என 631 இடங்களுக்கு 2,167 பேர் களத்தில் உள்ளனர்.

2-ம் கட்ட தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து தேர்தல்பிரச்சாரத்துக்காக வந்த வெளியூர்நபர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டத் தேர்தலில் நடைபெற்ற ஒரு சில குளறுபடிகள் 2-ம் கட்ட தேர்தலில் நடைறொமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரத்தில், மாதனூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கநேரி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் என யாரும் போட்டியிடவில்லை. மாவட்ட கவுன்சிலர் போட்டியிடுவதால் அங்கு வாக்குப்பதிவு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, நாயக்கநேரி ஊராட்சியில் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வர வேண்டும் என வருவாய் துறையினர் அங்குள்ள வாக்காளர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய நாயக்கநேரி மலைகிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x