

கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையத்தில் தொழிலாளர் துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இம்முகாமை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் 66 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி வட்டத்தில் 10 ஆயிரத்து 600 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று 500 தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் அனைத்து வட்டங்களிலும் நடைபெறும் என்றார். இம்முகாமில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வெங்கடாஜலபதி, கண்காணிப்பாளர் நல்லப்பா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டா.சுசித்ரா, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.