Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு முதற்கட்ட தேர்தல் - நெல்லை, தென்காசியில் அமைதியான வாக்குப்பதிவு :

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அசம்பாவிதங்கள் இல்லாமல் நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. கிராமப்புறங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, 211 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 902 பதவியிடங்களுக்கு 3,006 பேர் போட்டியிட்டனர்.

முதற்கட்ட வாக்குப்பதிவு 621 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகளை பதிவு செய்தனர்.

பதற்றமான 182 வாக்குச் சாவடி களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 64 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேரடியாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையிலிருந்து அதிகாரிகளால் கண் காணிக்கப்பட்டது. தேர்தல் பணியில் 5,035 வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபட்டனர். 10 பறக்கும் படை குழுவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்தனர்.

கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குச் சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு மாலை 5 மணிக்குமேல் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் அசம்பாவித ங்கள் இன்றி அமைதியாக நடைபெற்று முடிந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 8 பேர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 84 பேர், ஊராட்சித் தலைவர்கள் 118 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1,056 பேர் என 1,266 பேரை தேர்ந்தெடுக்க முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிகளுக்கு 3,534 பேர் போட்டியிட்டனர். இதில், ஒரு ஊராட்சித் தலைவர், 206 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 1,259 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிகளுக்கு 3,327 பேர் போட்டிக் களத்தில் இருந்தனர்.

69 மண்டலங்களில் உள்ள 754 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. 6,008 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணி யில் ஈடுபட்டனர். எஸ்பி கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலையில் இருந்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். கடையம் ஒன்றியம் லெட்சுமியூர், மணல்காட்டானூரில் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

57 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தியும், இதர 697 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும் கண்காணிக்கப்பட்டது. 5 வட்டார தேர்தல் பார்வையாளர்கள், 50 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்து வாக்களித்தனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, வாக்காளர்கள் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதுபோல வாக்காளர்களின் உடல்வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்தது ம் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

வருகிற 9-ம் தேதி இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x