மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளி வரதராஜூக்கு உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுத்து சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கி அதில் அவரை அமர வைத்த சேலம் ஆட்சியர் கார்மேகம்.				 படம்: எஸ்.குரு பிரசாத்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளி வரதராஜூக்கு உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுத்து சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கி அதில் அவரை அமர வைத்த சேலம் ஆட்சியர் கார்மேகம். படம்: எஸ்.குரு பிரசாத்

குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவுக்கு உடனடி நடவடிக்கை - மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கிய சேலம் ஆட்சியர் :

Published on

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த உடனே நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு சக்கர நாற்காலியை சேலம் ஆட்சியர் வழங்கினார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த டேனிஷ்பேட்டை ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ் (22). இரு கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர் தனது தந்தை ராமலிங்கத்துடன் நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.

மேலும், தனக்கு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

மனுவை பார்வையிட்ட ஆட்சியர் கார்மேகம், அவருக்கு உடனடியாக ரூ.6 ஆயிரத்து 400 மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கியதோடு வரதராஜை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் சென்று சிறப்பு வாகனம் மூலம் அவரை அவரது ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும், அவருக்கு அரசின் சலுகைகள் கிடைக்கவும் உறுதியளித்தார். ஆட்சியரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

இதனிடையே, குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி, ரூ.4 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு 8 கிராம் தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பால கங்காதரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், இணை இயக்குநர் (வேளாண்) கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in